By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 98

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)

இந்தியாவில் முதன் முறையாக எழுதப்பட்ட ஓவியங்கள் சுவரோவியங்களே. தமிழ்நாட்டில் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்ட மாளிகைகள், சித்திர மாடங்கள் என்று பெயர் பெற்றன. சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனைகளிலே ஓவியங்கள் எழுதப்பட்ட சித்திர மாடங்கள் இருந்தன. புறநானூறு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலே சுவரோவியங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் அல்லாமல், கோயில்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. மதுரைக்கு அருகில் இருக்கிற திருப்பரங்குன்றம் என்னும் குன்றின்மேல், பண்டைக் காலத்தில், முருகன் கோயிலில் ஓவியங்கள் எழுதப்பட்ட ஓவியச் சாலையை ‘எழுதெழில் அம்பலம்’ என்றும், ‘எழுத்துநிலை மண்டபம்’ என்றும் பரிபாடல் என்னும் நூல் குறிப்பிடுகிறது. அந்த எழுதெழில் அம்பலத்தில், அகலிகை சாபம் அடைந்து கல்லான கதை ஓவியமாக எழுதப்பட்டிருந்தது. இரதி, காமன், இந்திரன், அகலிகை, கௌதம முனிவன், பூனை முதலியவர்களின் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன (பரிபாடல் 19: 48-53). திருவெறும்பூர் கோயிலில் ஓவியம் எழுதப்பட்ட சித்திரகூடம் என்னும் மண்டபம் இருந்ததைச் சாசனங்கள் கூறுகின்றன.

7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன், முதன்முதலாகத் தமிழ்நாட்டிலே பாறைக் குன்றுகளைக் குடைந்து குகைக்கோயில்களை அமைத்தான். இவ்வரசனுக்குச் சித்திரகாரப்புலி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவன் அமைத்த குகைக்கோயில்கள் சிலவற்றில் சுவர் ஓவியங்களை எழுதி வைத்தான்.

தென்னாட்டு ஓவியம் என்பது விந்திய மலையிலிருந்து தெற்கே இலங்கைத்தீவு வரையில் உள்ள ஓவியங்களாகும். இவை பொதுவான அமைப்பில் ஒரேவிதமாக இருப்பனவாதலால் தென்னாட்டுச் சுவர் ஓவியத்தைத் தட்சிண சித்திரம் என்று கூறுவர். தட்சிண சித்திரம் என்று ஒரு நூல் இருந்தது என்றும், அந்நூலுக்குச் சித்திரகாரப்புலியாகிய மகேந்திரவர்மன் உரை எழுதினான் என்றும், அவனுடைய மாமண்டூர் குகைக்கோயிலிலுள்ள சாசனம் கூறுகிறது. சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தமது உரையில் ஓவியநூல் என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். இவ்விரண்டு நூல்களும் இப்போது கிடைக்கவில்லை.

Q98

முதலில் குகைச் சுவர்களில் ஓவியம் வரைந்தவன் :

  1. (1) இரண்டாம் நரசிம்மன்
  2. (2) புலிகேசி
  3. (3) பராந்தகன்
  4. (4) மகேந்திரன்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) மகேந்திரன்

  1. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்கள் அமைத்தான்.
  2. அவற்றில் சிலவற்றில் சுவர் ஓவியங்களையும் எழுதி வைத்தான்; அவனுக்குச் 'சித்திரகாரப்புலி' என்ற பெயரும் உண்டு.

கவனம்: (1), (2), (3) இல் உள்ள அரசர்களின் பெயர்கள் பத்தியில் இல்லை.