By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Tamil, Question 133

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)

பிற்காலத்திலும் இக்காலத்திலும் காப்பியவளர்ச்சி அத்துணைச் சிறப்படையவில்லை. இக்காலத்தில் கதை இலக்கியம் வளர்ச்சி பெற்றமையால், காப்பியம் எழுதுவாரும் மிக மிகக் குறையலாயினர். எனினும் சிறிய அளவிலானவையும் மொழி பெயர்ப்புக்களும், பழைய காப்பியங்களை அடியொற்றியவையுமாகச் சிற்சில நூல்கள் தோன்றின. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அவற்றுட் குறிப்பிடத்தக்கது. ஐந்து சருக்கங்களும் இரு பாகங்களுமாயமைந்த இந்நூல் விருத்தமும் சிந்துமாக 308 பாடல்களைக் கொண்டது.

வியாச பாரதத்தின் முன்பகுதியைப் புதிய உணர்ச்சியுடன் படைத்துப் பாரதமாதாவின் அவல நிலையைப் பாஞ்சாலியின் மேலிட்டு, உள்ளுணர்த்தும். ஒப்பற்ற காப்பியமாக இலங்குகிறது கவிமணியின் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ 11 படலங்களாலான நூல் ; நகைச்சுவை மிக்க சமுதாய அங்கதப்பாட்டு இது. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு 94 இயல்களில் 361 எண்சீர் விருத்தங்களைக் கொண்டு, வரலாறு போன்ற கற்பனைக் கதையொன்றைச் சீர்திருத்த நோக்குடன் படைக்கிறது. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் ‘அவனும் அவளும்’ என்பது ஒரு சமூகக் காப்பியமாகும். கண்ணதாசனின் ‘மாங்கனி’ 40 தலைப்பில் 1834 அடிகளைக் கொண்டது. முடியரசனின் ‘பூங்கொடி’ 31 காதைகளில் 5233 அடிகளைக் கொண்டு, மணிமேகலைக் கதையை முற்றிலும் தழுவி எழுதப்பட்டது. சுத்தானந்த பாரதியாரின் பாரதசக்தி மகாகாவியம் ஐந்து காண்டங்களையும் 136 படலங்களையும் 3103 அடிகளையும் கொண்டது.

புலவர் குழந்தை, தந்தை பெரியாரின் தன்மான இயக்க அடிப்படையில், இராம காதைக்கு மாற்றாகப் பாடியது, ‘இராவண காவியம்’. பாரதிதாசன் வாழ்த்துடன் உள்ள இந்நூலில் 5 காண்டங்களும் 57 படலங்களும் 3100 விருத்தப்பாக்களும் உள. இவையும் இவை போல்வனவுமாகக் குறுங்காப்பிய நூல்கள், நெடும்பாட்டுக்கள் தோன்றி வருகின்றன.

சென்னைப் பல்கலைக் கழகக் கிறித்தவத்துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் சூ. இன்னாசி, ‘தேவசகாயம்’ எனும் கிறித்தவத் தொண்டர் பற்றி, 2007 இல் ஒரு பெருங்காப்பியம் எழுதியுள்ளார். நான்கு காண்டம், 40 படலம் 4135 பாடல்கள் கொண்ட ‘திருத்தொண்டர் காப்பியம்’ எனும் நூல் தமிழ் மரபுப்படி அமைந்துள்ளது. ஏசுபிரான் கூறிய பல கதைகள் இதில் கிளைக் கதைகளாக அமைந்துள்ளன. நல்ல யாப்பு வடிவத்தில், தமிழ்க் காப்பிய மரபுப்படி அமைத்த மிகச் சிறந்த நூல் இது.

Q133

பெருங்காப்பியம் எழுதியவர் ________ இது ________ பற்றியது.

  1. (1) தேவசகாயம், கிறித்தவத் தொண்டர்
  2. (2) சூ. இன்னாசி, கிறித்தவத் தொண்டர்Correct answer
  3. (3) சூ. இன்னாசி, ஏசுபிரான்
  4. (4) கண்ணதாசன், ஏசுபிரான்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) சூ. இன்னாசி, கிறித்தவத் தொண்டர்

  1. பேராசிரியர் சூ. இன்னாசி, 'தேவசகாயம்' எனும் கிறித்தவத் தொண்டர் பற்றி 2007-இல் பெருங்காப்பியம் எழுதினார் என்று பத்தி கூறுகிறது.
  2. தேவசகாயம் காப்பியத் தலைவர், ஆசிரியர் அல்லர்.

கவனம்: ஏசுபிரான் கூறிய கதைகள் கிளைக் கதைகள் மட்டுமே; காப்பியம் அவரைப் பற்றியது அல்ல.